பாடல் வழிக் கல்வி:

ஒவ்வொரு துறையிலும் அது சார்ந்த பாடலைப் பாடி அதன் வழியாக தமிழ் சொற்களைக் கற்றுத்தரும் கல்வி இது.உதாரணமாக கானகக் கல்வியில்  

சினுக்கு சிட்டான் சிட்டுகுருவிக்கு காய்ச்சல் அடிச்சிச்சாம்

பக்கத்துக்கு வீட்டு பஞ்சு சிட்டு பதறி வந்துடுச்சாம்

தேன் சிட்டு தங்கச்சிக்கு சேதி போய்டுச்சாம்

துடிச்சிப் போய் அதும் வந்து துணைக்கு குந்திகிச்சாம்

ஊசி தட்டான் டாக்டர் வந்து ஊசி போட்டாரு

காசு வாங்க மறந்து அவரு பறந்து போனாரு“…

இப்படி வித விதமாய் பாட்டு பாடி மற்ற உயிரினகளோடு விளையாடிய நம் பிள்ளைகள் இப்போது கொசு பேட்டில் கொசு அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு உயிரனங்களை நேசிக்க கற்றுக் கொடுக்காமல் இல்லையென்றாலும் பரவாயில்லை ..குறைந்தபட்சம் வெறுக்காமல் இருக்க கற்றுக் கொடுத்தால்கூடப் போதும்.

நண்பர் தியோடர் பாஸ்கர் அழகாய் சொல்வார்

பிடி,களிறு,வேழம்,கொம்பன் என்று பலவிதமான பெயர்களை யானைக்கு வைத்த தமிழனின் பிள்ளைகள் அந்த மரபுச் செல்வம் பற்றி அறியாது ஆங்கிலத்தில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இங்கிலாந்தில் இல்லாத உயிரினமான யானையைக் குறிக்க elephant என்ற ஒற்றை சொல் மட்டுமே இருக்கிறது.புலியைக் குறிக்க மட்டுமே 11 சொற்கள் நம்மிடம் இருகின்றன.நூறுக்கும் அதிகமான பூக்களின் பெயர்களை பட்டியலிட்டு குறிஞ்சிப் பாட்டு எழுதியவர்களுக்கு,இன்று சுற்றுப் புறச் சூழலை தெரிந்துகொள்ள துறைச் சொற்கள் இல்லாமல் ஆங்கிலத்திடம் கடனாளியாக கடன் வாங்குகிறோம். அறிவியல் பூர்வமாக இயற்கையை போற்றிய தமிழரின் பிள்ளைகள் இன்று,ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களுக்கும்,தீம் பார்க்குகளுக்கும் பள்ளி சுற்றுலா போகும் அவலத்தை எங்கே சென்று முறையிடுவது.இயற்கையை அறிந்துக் கொள்ளாமல் இயந்திரங்களோடு வாழ்வதால் உற்சாக பானங்கள் ஏராளமாக விற்பனை ஆகின்றன..

டால்பினை வெளிநாட்டு உயிராக பார்க்கிற நமக்கு அதை ஓங்கில் என்று நம் முன்னோர்கள் அழைத்த விவரம் தெரியாது.

இனியாவது நம் பிள்ளைகளுக்கு தமிழில் உயிரினங்களை கற்றுக்கொடுப்போம்