கற்றல் இனிது ELGI நிறுவனத்தை சார்ந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பயிற்சி – நாள் முதல் – நாள் வரை பயிற்சியளித்தோம்
இது எங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனத்திற்கான பயிற்சி. ஊடக வழியாக எங்களின் செயல்பாடுகள் அறிந்த இந்நிறுவனம் எங்களிடம் முதலில் தகவல் கேட்டறிந்தார்கள்.பல ஊர்களில் பல குழந்தைகளுக்கு நாங்கள் பயிற்சி கொடுத்ததும் தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிறப்பான முறையில் பயிற்சி கொடுத்துக்கொண்டிருப்பதை அறிந்தும் எங்களோடு இணைய விருப்பம் தெரிவித்தனர்.
ஏழு நாள் 100 குழந்தைகள் வெவ்வேறு வயதுள்ள பிள்ளைகள் என்று சவாலான செயல்பாடாக கற்றல் இனிது அந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
ஏழு நாள் நடைபெற்ற இப்பயிற்சியில் அனைத்து பிள்ளைகளையும் பின்னோக்கி செல்லவைத்து மரபு சுவை உணரவைத்தோம்.
மரபு உணவு ,மரபு விளையாட்டு ,உழவு ,ஓவியம், கை அச்சு பயிற்சி  சூழலியல் பயிற்சி என கார்ப்பரேட்டின் மடி வளரும் குழந்தைகளை வேறு உலகத்திற்கு அழைத்துச்சென்றோம்.

மரபு விளையாட்டோடு தொடங்கிய பயிற்சியின் முதல்நாளில் எங்கள் அனுபவம் புதுமையாக இருந்தது. சிறிய தூரத்திற்கு கூட ஓட தயாரில்லாத நிலையில் சோம்பலை மட்டுமே உடல் மொழியில் காட்டிக்கொண்டு பிள்ளைகள் இருந்தனர். தங்கள் ஒட்டு மொத்த விளையாட்டையும் அவர்கள் கைபேசிக்குள் கேம்ஸ் ஆப்பில் வைத்திருந்தனர்  என்பது புரிய முடிந்தது. இரண்டாவது நாள் சூடேற தொடங்கியது விளையாட்டு பயிற்சி.வயதுக்கு தகுந்தார் போல் விளையாட்டுக்கள் பிரிக்கப்படிருந்தது. பம்பரம் ,தட்டாங்கல் , குதிரை பந்தயம், ஓடி பிடி , என்று அனைத்து விளையாட்டையும் விரும்பி விளையாடிய குழந்தைகள் நொண்டி விளையாட்டுக்கு அடிமையாகவே மாறிபோனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

பயிற்சியின் ஏழு நாளும்
மரபு உணவு மரபு சிற்றூண்டி என பிள்ளைகளின் நாக்கு  மரபு சுவையை சுவைத்தது. பரோட்டாவில் தொடங்கி அவர்கள் விரும்பி உண்ணும் ஃபாஸ்ட் ஃபுட் இல் உள்ள தீமைகள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தோம்.நாங்க கூறிய விளக்கங்கள் அனைத்தும் அவர்கள் காது மட்டும் அல்ல அவர்கள்  மூலமாக அவர்கள் வீட்டிற்குள்ளும் சென்றடைந்தது என்பதை நிறைவு நாளில் பெற்றோர்கள் வழியாக அறிந்தோம்.அம்மாவிடம் முதலமுறையாக  பிள்ளைகள் நிறைய கட்டளைகள் தர தொடங்கியிருந்தார்கள்.ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்க்க சொல்லியும் மரபு உணவை சமைக்க சொல்லியும் பிள்ளைகள் வலியுறுத்தியதாக சொன்ன அம்மாக்களின் முகத்தில் மட்டும் அல்ல கேள்வியுற்ற எங்களின் அகத்திலும் சந்தோசம் பொங்கியிருந்தது !!

சூழலியலில் பாம்பு குறித்து பயிற்றுவிக்க எண்ணி அதற்கான நபரை வரவைத்து பயிற்சியளித்தோம். பாம்பு குறித்த சந்தேகங்கள். பாம்பு குறித்த உண்மை தன்மை அனைத்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.
உழவு பற்றிய பயிற்சி என்றதும் பிள்ளைகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மரம் நடுதல் , விதை பந்து செய்தல் , உணவு கழிவுகளில் உரம் செய்தல் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டோம்.
மண்ணில் தாங்கள் அணிந்திருந்த செருப்பை கழட்ட தயங்கிய  பிள்ளைகள் அவர்களாகவே குழி தோண்டி  மரம் நட்டு மகிழ்ந்தனர்.
ஓவிய பயிற்சி கை அச்சு பயிற்சி என நிறைவாக முடிவடைந்தது .
கலைகளில்  பறை இசையும் நாட்டுப்புற பாடலும் பிள்ளைகள் விரும்பி கற்றுக்கொண்டனர்

நிறைவு நாளில் பம்பரம் பரிசாக பெற்ற குழந்தைகள் பம்பரத்தை சுழற்றி சுழற்றி விளையாடிக்கொண்டிருந்தனர்.நிறைவு நாளில்  கலந்து கொண்ட பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளின் மாற்றத்தை குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டனர் . தொலைக்காட்சி , அலைபேசி , டிஜிட்டல் சாதனங்களை தவி்ர்த்ததாகவும், உணவு குறித்து வீடுகளில் பேசி , தாங்கள் இனி துரித உணவுகளை உண்ண போவதில்லை என்று கூறியதாக கேட்க மன நிறைவு பெற்றோம் . பிரியா விடை பெற்று எழு நாள் பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பினோம் . இன்றும் கற்றல் இனிதுக்கு இப்பொழுதும் குழந்தைகளின் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது !!