மாறி வரும் காலச் சூழலில் நம்முடைய கல்வி முறை என்பது வளரும் பிள்ளைகளை இயந்திரமாக்கி வைத்திருக்கிறது. இங்கு பாடநூல்களில் உள்ளதையும் ஆசிரியர்கள் கூறுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளும் மனப் பான்மையை வளர்த்து வருகிறது நமது கல்விமுறை. கேட்டு உணர்ந்து கற்றல் என்பது இங்கு முற்றிலுமாக இல்லை.இந்த காலச்சூழலில் செயல்வழிக் கற்றல் முறை அவசியமாக்க வேண்டிய நிலை உருவாக வேண்டும்.அதில் பாடப் புத்தகங்களில் சொல்லப்படாத நமது பாரம்பரியங்களையும்,பண்பாடு, கலாச்சாரம்,விவசாயம் ,  உணவு முறை, மருத்துவம் , வீரம்,விளையாட்டுகள் போன்றவற்றை செயல்வழிக் கல்வி முறையில் கற்பிப்பதற்காக “ கற்றல் இனிது” வாழ்வியல் பள்ளி தொடங்கி உள்ளேன். இந்தப் பள்ளி முற்றிலுமாக மறக்கப்பட்ட நம் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது. இங்கு கற்பிக்கப்படும் பாங்கு மாணவர்களை வியக்கச் செய்யும். கற்றலில் தாமாகவே புத்தறிவு பெறுவார்கள்.தாமாகவே விரும்பி கற்க முன் வருவார்கள்.இப்படி விரும்பி கற்பதில் மாணவர்கள் முழுமையாக ஈடுபடுவதால் கற்றது காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.நம் நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கு மட்டுமே முக்கியத்துவமளித்து கல்விக் கூடங்கள் அமைத்து வருகின்றனர். பொறியியல் படிக்கும் மாணவராக இருக்கட்டும்  அல்லது மருத்துவம் படிக்கும் மாணவராக இருக்கட்டும் அடிப்படையில் நமது வாழ்வியல் பற்றிய புரிதல் உருவாக வேண்டும்.

மாணவர்கள் தாமே இவற்றை கற்க ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த கற்றல் முறை மனத் தெளிவை ஏற்படுத்தும்,மனத்தெளிவு எதிர்கால சிந்தனையை மேலோங்கி   உயர்த்தும்.பங்கேற்று கற்றல் வெகுவாக இருக்கும்.பல்வேறு தளங்களில் தேடலை உண்டாக்கும்.தேடலில் பல விவாதங்கள் இருக்கலாம் அதனால் தெளிவு பெறலாம்.உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாரபட்சமின்றி பொதுமுறையில் பயிற்றுவிக்கப்படும்.பயிற்று தரும் மாணவர்களும் சமநிலையில் நின்று விவாதிப்பதும்.மாணவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமையும்.ஒழுக்கம் ,கட்டுப்பாடு என விதிக்கப்படும் விதிமுறைகளில் மாணவர்களில் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது.இவற்றை மாற்றி வாழ்வியலோடு நமக்கான பாரம்பரியங்களை கற்பது நம் கல்வியை தாண்டி வாழ்வின் மீதான பெரு நம்பிக்கையை உருவாக்கும்.இப்படியான சூழலில் இந்த பள்ளி மிகுந்த அவசியமாகிறது.தமிழகத்தில் தமிழர்களுக்கே தங்களின் பாரம்பரியங்களையும் தொண்டு அடையாளங்களையும் கற்று தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது வேதனையளிக்கிறது.அதற்காக இதனை அப்படியே விட்டுவிடுவது நல்லது அல்ல.தமிழகத்தில் வலுவிழந்து போன வீர விளையாட்டுகளை நம்முடைய கற்றல் இனிது பள்ளி வாயிலாக மீட்டெடுத்து வர பயிற்சியளிக்கப்படும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.வீரவிளையாட்டுக்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக  மட்டுமல்ல. மரபு சார்ந்த அறிவு, பண்பாட்டின் அடையாளங்கள் ஆகியவற்றை மக்கள் முன் எடுத்துரைக்கும் களமாக வீரவிளையாட்டுக்கள் இருந்து வந்தன.ஒவ்வொரு விளையாட்டிற்கும் வரலாறு உண்டு,இந்த விளையாட்டுக்கள் அனைத்தும் பண்பாட்டின் அடையாளங்கள்.இவற்றை பள்ளி கல்லூரிகளில் நடத்துவது சாத்தியமற்றது.நம் பழந்தமிழர்கள் விளையாடிய பல வீரவிளையாட்டுக்கள் தொலைந்துவிட்டன. வீரவிளையாட்டுக்களில் கபடி,சிலம்பம் , வழுக்குமரம் ஏறுதல், வில் அம்பு, புலியாட்டம்,உரியடி,வடம் இழுத்தல், சுருள் வாள் சுழற்றுதல், வாள் சண்டை,கவட்டை வில் எறிதல் போன்ற சில விளையாட்டுக்கள் மட்டுமே அரிதாக இருக்கின்றது.நாட்பட இதுவும் மறைந்து வருகிறது. நமது கற்றல் இனிது பள்ளியின் நோக்கம் வீர விளையாட்டுக்கள் பாதுகாப்பது ஆகும்.அவை நம் பண்பாட்டின் ஒழுக்கத்தின் அடையாளம் ஆகும்.எனவே மேற்கண்ட வீர விளையாட்டுக்களை பயிற்றுவிக்கவிருக்கிறோம்.

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நாம்”. நாகரீகமும் உணவுக் கலாச்சாரங்களும் உலகிற்கு நம்மிடமிருந்து எடுத்துச் சென்றதற்கான ஆதாரங்கள் பல உள்ளன.உணவு சார்ந்த கலாச்சாரம் உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை தமிழர்களின் வாழ்வியல் முறையில் இருந்திருக்கின்றது.சித்த மருத்துவத்தில் எது உணவாக இருக்கின்றதோ அதுவே நமக்கு மருந்தாக வேண்டும்.எது நமக்கு மருந்தாக இருக்கின்றதோ அதுவே நமக்கு உணவாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் செயல்பட்டு வந்தது.நம் உடல் நலத்திற்கு ஏற்றவாறு உணவுப் பொருட்களின் குணத்தை வகுத்து எந்த உணவை எந்த பருவத்தில் உண்ண வேண்டும் என்று வகுக்கப்பட்டிருந்தது. தமிழர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையில் வாழ்ந்து வந்தார்கள். மேலும் வகுக்கப்பட்ட வாழ்வியலை நேர்த்தியாக கடை பிடித்தார்கள்.

உலகிற்கே முன்னோடியாக விளங்கிய தமிழ்ச் சமூகம் இன்று பயன்படுத்தும் உணவு முறைகளை எண்ணிப் பார்த்தாலே மனம் வேதனை கொள்கிறது.இன்று உணவு சார்ந்த விழிப்புணர்வு இல்லாத சூழல் உருவாகிவிட்டது.இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற சமூகமும் பலமற்று போனவர்களாய் இருப்பார்கள் எதிர்கால சந்ததியினர்.

பழங்காலத்தமிழர்களின் உணவு முறையில் இருந்த  சிறு தானிய உணவு வகைகள் அவர்களை எந்த வித உடல் நல குறையுமில்லாமல் நீண்ட நாட்களுக்கு அவர்களை ஆரோக்கியமாக வாழச் செய்தது.இன்று நாம் நாகரீக நுகர்வு கலாச்சாரத்தின் கோரப்பிடியில் சிக்கிக் கிடக்கின்றோம் திக்கற்றநிலையில்.சங்ககாலத்தில் 3000-மூவாயிரத்திற்கும்  மேற்பட்ட உணவு வகைகளை நம் தமிழர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.அன்றைய காலகட்டத்தில் உடல் வலிமையும் ஆரோக்கியமும் தமிழர்கள் உண்ட உணவுகளால் வந்தவை. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளால் அதீத உடல்திறனும் அற்புதமான ஆரோக்கியமும் கிடைத்தன.இவ்வாறான பாரம்பரிய உணவுகளை சமைப்பதும் அது குறித்து தெளிவுகளையும் வளர்த்தெடுக்கும் பயிற்சிகளை கொடுத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி பாரம்பரியத்தை காத்து மேன்மை படுத்தும் முறையை மேற்கொள்ளவிருக்கிறோம்.தமிழினத்தை,தமிழ் கலாச்சாரத்தை,தமிழனின் வீரத்தை,தமிழர் பாரம்பரிய உணவுகளைப் பற்றிய புரிதலை உருவாக்குவதே எங்களுடைய தலையாய கடமையாக கருதுகின்றோம். சிறு தானிய வகைகளான திணை , வரகு,சாமை, குதிரைவாலி போன்றவற்றை நடப்பு உணவுப்பழக்கங்களில் சேர்த்து அதனை பழக்கப்படுத்துகிறோம். வலிமையான உடலமைப்பு கொண்டிருந்த தமிழர்கள் தளர்ந்து போனதை முற்றிலுமாக மாற்றி எதிர்கால சந்ததியினர் வலிமையானவர்களாக மாற இந்த பாரம்பரிய உணவுகளை பற்றிய புரிதல்களை கற்பிக்கின்றோம்.

நமது முன்னோர்கள் நாட்டுரக விதைகளை அதாவது வறட்சியை தாங்கும் தன்மை கொண்ட விதைகளைப் பயன்படுத்தினார்கள்.ஆனால் தற்போது வீரிய விதைகள் வரவால் வறட்சியைத் தாங்க முடியாமல் விரைவில் கருகிப் போய் விடுகின்றன.அதிக விளைச்சல் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் பூச்சுக் கொல்லி மருந்துகளையும் ரசாயன உரங்களையும் பயன்படுத்தி மண்வளத்தைக் கெடுத்து விளைநிலத்தை பாழ்படுத்தி வைத்திருக்கிறோம். இந்த ரசாயன உரங்களாலும் பூச்சுக் கொல்லி மருந்துளாலும் பலவித உடல் நல பாதிப்புகள் உண்டாவதை ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் எடுத்துரைத்து வருகின்றனர். ஆனால் அதற்கு மாற்றுவழி இல்லை என்று நினைத்து பெரும்பான்மை விவசாயிகள் ரசாயன உரங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அதிக மகசூல் பெற வேண்டும் என்ற அறியாமையில் சிக்கி இயற்கை விவசாயத்தை தவிர்த்து வந்ததன் விளைவு மனித ஆரோக்கியத்திற்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது.பூச்சி மருந்துகள் இல்லாத இயற்கை முறையில் உரங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்து அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க விவசாய சமூகம் முன் வர வேண்டும்.பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை பயிற்று வித்தும் விவசாயம் குறித்த அவசியத்தையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தும் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்த பயிற்சி வகுப்புகள் அமையும்.

தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுக்க மண் வளம் சீரழிந்து வருகின்றது.மண்ணில் உப்புத் தன்மை அதிகரித்து வருகிறது.இயற்கை முறை விவசாயத்தாலும், நீர் அதிகம் தேவைப் படாத சிறு தானியங்களை பயன்படுத்துவதன் மூலமாகவும் மண்வளத்தை மீட்டெடுக்கலாம்.மண்புழு உரமும், சாணமும் சிறந்த உயிர்ச்ச்சத்துள்ள உரமாகவும், கோமியம் சிறந்த பூச்சிக் கொல்லியாகவும் இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் இதனை புரிந்து கொள்வதேயில்லை. நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி மக்களுக்கு இயற்கை விவசாயம் மேலிருந்த அக்கறையும் மரியாதையும் அறவே இல்லாமல் போய்விட்டது.ரசாயன உரங்களை பயன்படுத்தி கிடைக்கும் மகசூலை விட இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெற முடியும்.நம் பாரம்பரிய விவசாயத்தையும் ,சிறுதானியங்கள் பயிரிடுதல் ,மண்வளப் பாதுகாப்பு,வீட்டுத் தோட்டம் ,உயிர் உரங்கள்,இயற்கை வழி விவசாயம், மண்புழு உரம் தயாரிப்பு போன்ற அம்சங்களை பயிற்சியில் கற்றுக்கொடுக்கவிருக்கின்றோம்.இதனால் ஆரோக்கியமான வளமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் உருவாக்க முடியும்.

கலைகள் = கரகாட்டம், பறையாட்டம் ,கும்மிகாவடி,மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை,பொம்மலாட்டம், தெருக்கூத்து,புலியாட்டம், போன்ற  நமது பாரம்பரிய விளையாட்டுக்கள் கற்பிக்கப்படும்.அயல்நாட்டு மோகத்தின் கோரப்பிடியில் நம் பாரம்பரியங்களை மறந்துவிட்டு அந்நிய நாட்டு விளையாட்டுகளுக்கும் ,வீடியோ கேம்களுக்கும் நாம் குழந்தைகளை அடிமைப் படுத்தி வைத்திருக்கிறோம்.இதன் விளைவாக நமது பாரம்பரிய விளையாட்டுக்களை தொலைத்துவிட்டு நிற்கின்றோம்.நமது தமிழர்கள் கண்டுபிட்த்த விளையாட்டுக்கள் அனைத்தும் உடல்,மனம், சிந்தனை ,மொழி,கலாச்சாரம் ,பண்பாடு,கணிதம் , வாழ்க்கைமுறை ,விடாமுயற்சி, உடல் பலம்,ஆரோக்கியத்தை வழங்கக்கூடியதாக இருந்து வந்திருக்கின்றது.இவையெல்லாம் நம் மனதிற்கும் உடலிற்கும் நன்மைகளை வழங்கக்கூடியவைகளாக இருந்து வந்திருக்கின்றது.இன்று நம் பிள்ளைகள் விளையாடும் எந்த ஒரு விளையாட்டும் உடல் ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் அளிப்பதில்லை.மேலும் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.பழந்தமிழர் விளையாட்டுக்களை மீட்டெடுப்பது குறித்த பயிற்சிகளை கொடுத்து நமது பாரம்பரியத்தை கட்டிக் காப்பதும் கற்பிக்கப் படும்.

பாரம்பரிய வைத்திய முறைகள்  நமக்கு எவ்வாறு பயன்படுகிறது என்று பார்த்தோமேயானால் மூலிகைகள் கொண்டு நோய்களை குணப் படுத்துகின்றனர்.இயற்கை மனிதனுக்கு தேவையான பல்வேறு தாவரங்களையும் மூலிகைகளையும் நோய் தீர்க்கும் மருந்தாக வழங்கியுள்ளது,அதனைப் பகுத்தறிந்து பிணிதீர்க்கும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை எதிர்கால சந்ததியினருக்கு உண்டாக்குவதாகும், ஆரோக்கியம் குறித்த ஆர்வம் பெருகி வரும் இந்த நேரத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கட்டமைப்பை பற்றியும் அவற்றை எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும் கற்பித்துத் தரப்பட்டும்.

நமது பாரம்பரிய மருத்துவர்கள் பஞ்ச பூதங்களைஅடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டவை. இன்றைய சமுதாய கேடுகளை களைந்து நம் பாரம்பரிய அறிவை மீட்டெடுக்க வேண்டும்.உணவே மருந்து, மருந்தே உணவு எனும் தத்துவத்தை  நம் பாரம்பரியங்கள் நமக்காக கொடுத்துள்ளது,அதை பின்பற்றி நடக்க வாழ்வியல் முறையில் கற்றுக் கொடுக்கப்படும்.