இயற்கை உணவு வழிக் கல்வி :

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நாம்”. நாகரீகமும் உணவுக் கலாச்சாரங்களும் உலகிற்கு நம்மிடமிருந்து எடுத்துச் சென்றதற்கான ஆதாரங்கள் பல உள்ளன.உணவு சார்ந்த கலாச்சாரம் உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை தமிழர்களின் வாழ்வியல் முறையில் இருந்திருக்கின்றது.

சித்த மருத்துவத்தில் எது உணவாக இருக்கின்றதோ அதுவே நமக்கு மருந்தாக வேண்டும். எது நமக்கு மருந்தாக இருக்கின்றதோ அதுவே நமக்கு உணவாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் செயல்பட்டு வந்தது.

நம் உடல் நலத்திற்கு ஏற்றவாறு உணவுப் பொருட்களின் குணத்தை வகுத்து எந்த உணவை எந்த பருவத்தில் உண்ண வேண்டும் என்று வகுக்கப்பட்டிருந்தது. தமிழர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையில் வாழ்ந்து வந்தார்கள். மேலும் வகுக்கப்பட்ட வாழ்வியலை நேர்த்தியாக கடை பிடித்தார்கள்.

உலகிற்கே முன்னோடியாக விளங்கிய தமிழ்ச் சமூகம் இன்று பயன்படுத்தும் உணவு முறைகளை எண்ணிப் பார்த்தாலே மனம் வேதனை கொள்கிறது.இன்று உணவு சார்ந்த விழிப்புணர்வு இல்லாத சூழல் உருவாகிவிட்டது.இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற சமூகமும் பலமற்று போனவர்களாய் இருப்பார்கள் எதிர்கால சந்ததியினர்.


பழங்காலத்தமிழர்களின் உணவு முறையில் இருந்த  சிறு தானிய உணவு வகைகள் அவர்களை எந்த வித உடல் நல குறையுமில்லாமல் நீண்ட நாட்களுக்கு அவர்களை ஆரோக்கியமாக வாழச் செய்தது.இன்று நாம் நாகரீக நுகர்வு கலாச்சாரத்தின் கோரப்பிடியில் சிக்கிக் கிடக்கின்றோம் திக்கற்றநிலையில்.

சங்ககாலத்தில் 3000-மூவாயிரத்திற்கும்  மேற்பட்ட உணவு வகைகளை நம் தமிழர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.அன்றைய காலகட்டத்தில் உடல் வலிமையும் ஆரோக்கியமும் தமிழர்கள் உண்ட உணவுகளால் வந்தவை. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளால் அதீத உடல்திறனும் அற்புதமான ஆரோக்கியமும் கிடைத்தன.

இவ்வாறான பாரம்பரிய உணவுகளை சமைப்பதும் அது குறித்து தெளிவுகளையும் வளர்த்தெடுக்கும் பயிற்சிகளை கொடுத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி பாரம்பரியத்தை காத்து மேன்மை படுத்தும் முறையை மேற்கொள்ளவிருக்கிறோம். தமிழினத்தைதமிழ் கலாச்சாரத்தை,தமிழனின் வீரத்தை,தமிழர் பாரம்பரிய உணவுகளைப் பற்றிய புரிதலை உருவாக்குவதே எங்களுடைய தலையாய கடமையாக கருதுகின்றோம்.

சிறு தானிய வகைகளான திணை , வரகு,சாமை, குதிரைவாலி போன்றவற்றை நடப்பு உணவுப்பழக்கங்களில் சேர்த்து அதனை பழக்கப்படுத்துகிறோம். வலிமையான உடலமைப்பு கொண்டிருந்த தமிழர்கள் தளர்ந்து போனதை முற்றிலுமாக மாற்றி எதிர்கால சந்ததியினர் வலிமையானவர்களாக மாற இந்த பாரம்பரிய உணவுகளை பற்றிய புரிதல்களை கற்பிக்கின்றோம்.